Regional01

நிபந்தனைகள் இல்லாமல் பயிர்க்கடன் வழங்க முதல்வருக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

வேளாண் கூட்டுறவு சங்கங்களில், நிபந்தனைகள் இல்லாமல் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும், என பல்வேறு விவசாய சங்கங்கள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, தற்சார்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் (கே.சி), தமிழக விவசாயிகள் சங்கம், புகலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய 3 பாசனக் கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் பயிரிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. விவசாயிகளுக்கு விதை மற்றும் வயல் வேலைகள் செய்வதற்கான நிதி ஆதாரம் உடனடியாகத் தேவைப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் பயிர்க் கடனை வைத்து தான் பெரும்பாலான விவசாயிகள் வேளாண் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனைப்படி, பயிர்க் கடன் வழங்குவதற்கு இந்த பருவத்தில் செய்கிற பயிர் பற்றிய விவரம் அடங்கலில் பதிவு செய்திருக்கவேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

அடங்கல் ஆவணத்தில் எப்போதும் கடந்தகால பசலியில் (பயிராண்டு) செய்யப்பட்டுள்ள பயிர் விவரம் தான் குறிக்கப்பட்டு இருக்கும். அப்படி இருக்க நடப்பு பசலியில் செய்கிற பயிரை அடங்கல் ஆவணத்தில் கொடுக்கவேண்டும் என்று கேட்பது நடைமுறையில் முரண்பாடு கொண்டதாகும் .

மேலும், தற்போது வருவாய்த்துறை மூலமாக, எந்த பயிர் ஆய்வுகளும் செய்யப்பட்டு அடங்கலில் பதிவு செய்யப்படுவது இல்லை. புதிய நிபந்தனையால், பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் கடன் வாங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த நிபந்தனையை நீக்கி, விவசாயிகள் எளிதாக பயிர்க்கடன் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT