தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த அ.ஞானகவுரி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த க.பாலதண்டாயுதபாணி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கல்வியை மேம்படுத்த பல்வேறு புதுமையான திட்டங்களை நிறைவேற்றினேன். அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தமிழகத்திலேயே முதல்முறையாக அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் நேரம் வரையறை செய்து ஆன்லைன் தேர்வை நடத்தினோம். அதுபோல இங்கேயும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தை கல்வியில் மாநிலத்தில் முதலிடத்துக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். திறனாய்வு போட்டித் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அனைத்து கல்வித்துறை அலுவலகங்களிலும் ஊழலற்ற, நேர்மையான, தெளிவான, ஒளிவுமறைவற்ற நிர்வாகம் உறுதி செய்யப்படும் என்றார் அவர்.