Regional02

அனுமதியின்றி மது விற்றதை தடுத்த - இளைஞர்கள் மீது போலீஸார் பொய் வழக்கு : தஞ்சை ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றவர்களை தடுத்து, காவல் துறையில் புகார் அளித்த இளைஞர்கள் மீதே போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கிராம மக்கள் நேற்று ஆட்சியரிடம் நேரில் முறையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் அருகே உள்ள ஆலக்குடி கிராமத்தினர் நேற்று தஞ்சையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளது: ஆலக்குடியில் அனுமதியின்றி சிலர் மதுபாட்டில்கள் விற்றதை தடுக்கும் வகையில், வல்லம் போலீஸாரிடம் ஆலக்குடி கிராம இளைஞர்கள் புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் மது விற்பனை செய்பவர்களுடன் சேர்ந்து கொண்டு, புகார் அளித்த இளைஞர்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனவே, ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, கிராமத்தின் நலனுக்காக செயல்பட்டவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து எதிர்காலத்தை வீணாக்கும் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம்: தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் தற்காலிக இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

கிராமத்துக்குரிய பொதுவான இடம் போதியளவு இருப்பதால், அங்கு அரசு சார்பில் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அந்த கிராம விவசாயிகள் மனு அளித்தனர்.

அதேபோல தஞ்சாவூர் அருகே மாரனேரியில் 80 ஆண்டுகளாக பட்டா பெற்று, ஏரிக்கரையில் விவசாயம் செய்து வருபவர்களின் நிலங்களையும், நில ஆக்கிரமிப்பு எனக் கூறி நில எடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபடுவதை கைவிட வேண்டும் என ஆட்சியரிடம் அந்த கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தெய்வீகத் தமிழ் புரட்சிப் பாசறையின் நிறுவனர் ஆதிமதனகோபால், ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘‘செப்.10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை மத்திய, மாநில அரசுகள் தேசிய விழாவாக கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT