பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் `ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டை நவீனப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காகஅங்குள்ள கடைகளை காலி செய்துவிட்டு, பாளையங்கோட்டையில் திருச்செந்தூர் சாலையிலுள்ள பழைய காவலர் குடியிருப்பு வளாகம் மற்றும் ஜவஹர் மைதானத்தில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்படும் என்றும், அவ்வாறு தற்காலிககடைகள் அமைக்க முடியவில்லை என்றால் காந்தி மார்க்கெட்டை நவீனப்படுத்தும் பணி கைவிடப்படும் என்றும், கடந்த 12-ம் தேதி திருநெல்வேலி மாநகராட்சிஆணையர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க கோரிக்கையை ஏற்றும், பொதுமக்கள் நலன் கருதியும், தற்காலிக கடைகளை ஜவஹர் மைதானத்திலும், பழைய காவலர் குடியிருப்பு வளாகத்திலும் அமைக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில், ஜவஹர் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்க இந்து அமைப்புகளும், வேன் ஓட்டுநர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதியில் தசரா விழா நடைபெறுவதால் கடைகளை அமைக்க கூடாது என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்குதற்காலிக கடைகள் அமைக்கப்படவில்லை. இதற்கு மாற்றாக வேறுபகுதிகளில் தற்காலிக கடைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஆனால், இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
`ஜவஹர் மைதானத்திலும், பழைய காவலர் குடியிருப்பு வளாகத்திலும் தற்காலிக கடைகள் அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கியசங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மார்க்கெட்டிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வியாபாரிகள் சங்கத்தினர் மார்க்கெட் பகுதிக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.