தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் அ.வரதராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “22.08.1942-ல் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் நடைபெற்றது. எட்டயபுரம் வட்டம் கடலையூர் கிராமத்தில் 35 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலேயப் படைகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடுநடத்தியதில் கடலையூர் சங்கரலிங்க முதலியார் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களது நினைவாக கிராம மக்கள் சார்பில் கடலையூரில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் வரும் 22-ம் தேதி மரியாதை செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில பாரத இந்து சேனா தமிழகம் அமைப்பின் மாவட்ட தலைவர் எம்.மாலையப்பன் அளித்த மனுவில், “விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு சிற்பக் கலைஞர்கள், கைவினைப்பொருட்கள் தயாரிப்பவர்கள், வர்ணம் தீட்டுபவர்கள் என,பல்வேறு தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக உழைக்கின்றனர். எனவே, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி, மாவட்டதலைவர் வசந்தகுமார் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு பணியாற்றும் தனியார் காவலர்களும் மேல்சட்டை அணியாமல் பணி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க முத்தையாபுரம்- முள்ளக்காடு பகுதி தலைவர் தனராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “ஸ்பிக் நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி 30-வது வட்ட அமமுக செயலாளர் காசிலிங்கம் அளித்துள்ள மனுவில், “தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையம், ஆதார் மையம் சரியானமுறையில் செயல்படவும், அங்கு வரும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜாய்சன், மாநகர செயலாளர் கா.முத்துக்கல்யாணி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “ தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கலை, அறிவியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.