Regional02

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர், முதுநிலை படிப்புகளில் விரைவில் மாணவர் சேர்க்கை : துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில், துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தேசியக் கொடியேற்றி வைத்து பேசியது:

கரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டாக இணையவழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. முதல், மூன்றாம் பருவத் தேர்வுகள் இணையவழியாக நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஜூலையில் நடத்தப்பட்ட இளங்கல்வியியல் மற்றும் 2-ம் பருவத் தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. அக்.2020-ல் நடைபெற்ற தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் இணையவழியாக நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய வழிகாட்டு முறைகளுக்கு ஏற்ப பொது நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு நடத்தப்பட்டு, 119 முனைவர் பட்ட மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணையவழியாகப் பெறப்பட்டு வருகின்றன. விரைவில் சேர்க்கை நடைபெற உள்ளது என்றார்.

பின்னர், தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் 25 ஆண்டுகள் களங்கமில்லாப் பணி நிறைவு செய்த பேராசிரியர் பா.ஜெயக்குமாருக்கு ஊக்கத்தொகை ரூ.2,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT