திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த உபகோயிலான வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை வெயிலுகந்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு மேல் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் தொடங்கியது. காலை 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க ரமேஷ் ஆறுமுகம் வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காலை 7.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சாங்கம், தேவாரம் பாடப்பட்டது. பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோயில் கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் உலா நடைபெற்றது. ஆவணி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் கோயிலுக்குள் அம்மன் எழுந்தருளி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 10-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் கரோனா ஊரடங்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் படி கோயில் வளாகத்தில் தேரோட்டம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.