மேட்டூர் அணை நீர்மட்டம் 72.03 அடியாக குறைந்ததை தொடர்ந்து அணை நீர்தேக்கப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கடந்த 1934-ம் ஆண்டு 120 அடி கொள்ளளவு கொண்ட அணை கட்டி முடிக்கப்பட்டது. அப்போது, அணையின் நீர்தேக்கப் பகுதியில் இருந்த கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அக்கிராமங்களில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் அக்கோயிலில் உள்ள நந்தீஸ்வரர் சிலை, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்டவைகள் நீர்தேக்கப்பகுதியில் அப்படியே உள்ளன. அவை அணை நீர்மட்டம் உயரும்போது அணை நீரில் மூழ்கிவிடும். அணை நீர்மட்டம் குறையும் போது, அவை நீர்பரப்புக்கு இடையில் வெளியில் தெரியும்.
குறிப்பாக, அணையில் 65 அடி உயரத்துக்கு மேல் நீர்தேங்கும்போது, ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தீஸ்வரர் சிலை முழுவதுமாக மூழ்கிவிடும். இதேபோல, நீர்மட்டம் 75 அடிக்கு மேல் உயரும்போது, கிறிஸ்தவ தேவாலய கோபுரமும் நீரில் மூழ்கிவிடும். அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டும்போது, நீர்தேக்கப்பரப்பான 59.29 சதுரமைல் பரப்புக்கு நீர் தேங்கி கடல்போல காட்சியளிக்கும்.
தற்போது, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியும் கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆனால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரத்து 649 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 7 ஆயிரத்து 272 கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்து குறைவாகவும், நீர் வெளியேற்றம் அதிகமாகவும் இருப்பதால் நேற்று முன்தினம் 72.77 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 72.03 அடியானது. நீர் இருப்பு 34.46 டிஎம்சி-யாக உள்ளது.
அணை நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து நீர்தேக்கப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் நீர்பரப்புக்கு இடையில் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது.