Regional04

சேலம் மாவட்ட சேகோ ஆலைகளில் சோதனை : கலப்பட சந்தேக அடிப்படையில் 80 டன் ஜவ்வரிசி பறிமுதல்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள சேகோ ஆலைகளில் கலப்பட தடுப்பு கண்காணிப்புக் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கலப்பட சந்தேகத்தின் பேரில் 80 டன் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவை பறிமுதல் செய்தனர்.

சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் அதிகளவில் விளையும் மரவள்ளிக் கிழங்கை கொண்டு ஜவ்வரிசி, கிழங்கு மாவு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யக்கூடிய சேகோ உற்பத்தி ஆலைகள் சேலம் மாவட்டத்தில் பரவலாக உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி, கிழங்கு மாவு ஆகியவை வட மாநிலங்களில் உணவுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஜவ்வரிசி, கிழங்கு மாவு உற்பத்தியில், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் விலை குறைந்த மக்காச்சோள மாவு ஆகியவை கலப்படம் செய்யப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்து வருகிறது. இதனால், மரவள்ளிக் கிழங்கின் விலை குறைந்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, கலப்பட உற்பத்தியை தடுக்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி உணவு பாதுகாப்புத்துறை, சேகோ சர்வ் ஊழியர்கள், வணிக வரித்துறை, காவல் துறையினர் அடங்கிய குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், சில ஆலைகளில் கலப்பட சந்தேகத்தின் பேரில் உற்பத்திப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேகோ ஆலைகளில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுவது ரசாயன கலப்படத்தை தடுப்பது ஆகியவை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், உற்பத்தி செய்யப்பட்ட ஜவ்வரிசி, உலர் கிழங்கு மாவு ஆகியவற்றில் இருந்து 21 மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. கலப்பட சந்தேகத்தின் அடிப்படையில் ஜவ்வரிசி, கிழங்கு மாவு ஆகியவை 80 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர் கலப்படம் இருப்பது தெரியவந்தால் உரிய ஆலைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT