Regional02

விசாரணைக்கு சென்றவரை தாக்கிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட் :

செய்திப்பிரிவு

அறந்தாங்கி காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்றவரை தாக்கிய தலைமைக் காவலர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ரெத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(69). விவசாயி. இதே ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். உறவினர்களான இவர்களுக்கிடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அறந்தாங்கி காவல் நிலையத்துக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். அங்கு பிரச்சினை தொடர்பாக தலைமைக் காவலர் முருகன் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதில், முருகனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி, முருகன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், தலைமைக் காவலர் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்பின்பு, அவர் அங்கிருந்து திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே, விவசாயியை தாக்கிய சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி டிஎஸ்பி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தலைமைக் காவலர் முருகன் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முருகனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி நேற்று உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது துறைரீதியான விசாரணையும் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT