மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை 160 கிலோ மீட்டருக்கு ரூ.11,822 கோடி மதிப்பில் இரட்டைவழி இருப்பு பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த தடத்தில் வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை வரைமுடிவுற்றுள்ள பணிகளில் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், தட்டப்பாறை முதல் மீளவிட்டான் ரயில் நிலையம் வரை 7.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 2-வது புதியஇருப்பு பாதையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேற்று ஆய்வு செய்தார். இந்த இருப்பு பாதையில் 4 சிறிய பாலங்கள், மீளவிட்டான் அருகில் பெரிய மேம்பாலம், இடதுபக்க வளைவு இருப்பு பாதை, மின்சார வயர் கிராசிங், மின்மயமாக்கல் பணிகள், ரயில் பாதை இணைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தட்டப்பாறை முதல் மீளவிட்டான் வரையிலான புதிய 2-வது இருப்பு பாதையில் பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவடையும். அதன் பின்னர் பாதுகாப்பு ஒப்புதல் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மீளவிட்டான் வரை ரயில்கள் இயக்கப்படும். மதுரை -தூத்துக்குடி வரையிலான புதிய 2-வது இருப்பு பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும்” என்றார்.
கோட்ட ரயில்வே மேலாளர் பி.ஆனந்த், ரயில் விகாஸ் நிகாம் முதன்மை திட்ட இயக்குநர் கமலாகர ரெட்டி, கட்டுமான முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி உடனிருந்தனர்.