தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்பு, செங்கல் கட்டுமான அமைப்பு என, 100-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று மாறமங்கலம் பகுதியில் மிகவும் பழமையான செப்பு மற்றும் அலுமினிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொற்கை ஆய்வில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் கீழ்பகுதியில் சுமார் 3 அடி உயரம் கொண்ட உணவு தானியங்கள் சேமிக்கும் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உணவு தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, “தற்போது அகழாய்வுக்கு ஒரு பொற்காலம் என்றே கூறலாம். ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கையில் கொற்கை உள்ளிட்ட பகுதியில் கடல் சார்ந்த ஆய்வு செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொற்கையில் உணவு தானியங்கள் சேகரிக்கும் கொள்கலன் கிடைத்துள்ளது. வரும் நாட்களில், மேலும் பல அற்புத தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார் அவர்.