வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
Regional03

வந்தவாசி அருகே - கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி : பொதுமக்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

வந்தவாசி அருகே கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் சளுக்கை கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயி லுக்கு சொந்தமான நிலம் ஆக்கிர மிக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும் போது, “பொன்னியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, தனி நபர் ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்துக்கு செல்வதற்காக பாதை அமைக்க ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார். அவருக்கு ஆதரவாக, ஊராட்சி மன்ற நிர்வாகமும் செயல்படுகிறது. கோயில் நிலத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.குப்புசாமி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம், தனி நபருக்கு ஆதரவாக ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதன்பிறகு, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ் உள்ளிட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.குப்புசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர், தீர்மானம் ரத்து செய்யப் பட்டதாக எழுத்துப்பூர்வமாக அறிவித்ததும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT