இன்றைய செய்தி

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் : ரூ.1000 கோடி ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவிப்பு :

செய்திப்பிரிவு

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும். குப்பைகள் உருவாகும் நிலையிலேயே 100 சதவீத பிரித்தலை உறுதிசெய்வதன் வாயிலாகவும், வீடுதோறும் குப்பைகள் சேகரித்தல் மற்றும் 100 சதவீதம் அகற்றுவதன் வாயிலாகவும் நாம் குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவோம். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் நீர்நிலைகள் மீட்டெடுப்பது, பூங்காங்கள் அமைப்பது, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதி, மரம் நடுதல், பள்ளிக் கட்டிடங்கள், மருந்தகங்கள், நூலகங்கள் மேம்படுத்துவதற்கு அனைத்து நகர்புறங்களிலும் நமக்கு நாமே திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நமக்கு நாமே திட்டப் பணிகளில் கணிசமாக பங்களிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும். மக்கள் சேவையில் மாநகராட்சி மற்றும் நமது சேவையில் நகராட்சித் திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும்.

திருச்சியில் புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் டியுஎப்ஐடிசிஓ (TUFIDCO) நிதியுதவியுடன் ஏற்படுத்தப்படும்.

‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.1,000 கோடியில் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்துக்கு ரூ.2,350 கோடி, அம்ருத் திட்டத்துக்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கியின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கென 2021-22 ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT