தஞ்சாவூர் மாநகராட்சியில் கடை களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு, ஊழியர்களுக்கு 2 மாத நிலுவை ஊதியம், ஓய்வூதியம், பணப் பலன்கள் என ரூ.11 கோடி நேற்று வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சியாக கடந்த 2014-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அப்போது முதல் மாநகராட்சி வருவாயைப் பெருக்க முடியாமல், நிதி நெருக்கடியில் தவித்து வந்தது.
இதனால், மாநகராட்சியின் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம், கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் என முறையாக வழங்கப்படாமல் இருந்தது. இதைக் கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், திருவையாறு பகுதி பேருந்து நிலையங்களில் கட்டப்பட்ட 95 கடைகளுக்கான ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மாத வாடகைக்கு கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. மேலும், கடைகளுக்கான வைப்புத் தொகையும் ரூ.10 லட்சமாக நிர்ண யிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகையைக் கொண்டு 970 ஊழியர்களின் ஊதியம், 160 ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் சில ஓய்வூதியர்களுக்கான பணப் பலன்கள் என ரூ.11 கோடியை மாநகராட்சி நிர்வாகம் நேற்று வழங்கியது.
இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறியது:
தஞ்சாவூர் பழைய மற்றும் திருவையாறு பேருந்து நிலையங் களில் 138 கடைகள் செயல்பட்டன. அதன் மூலம் ஆண்டுக்கு வெறும் ரூ.74.47 லட்சம் மட்டுமே வருமான கிடைத்தது.
தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 95 கடைகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு, மாந கராட்சி வருமானத்தைப் பெருக் கும் வகையில் வாடகை மற்றும் வைப்புத் தொகை அதிகப் படுத்தப்பட்டது. இதனால், ஆண்டுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இதன் மூலம் நிதி சுமையும் குறையும் என்றனர்.