மதத் தலைவர்களின் கடமை அந்த மதத்தைப் பரப்புவதும், பாதுகாப்பதுமாகவே இருக்கும். மதுரை ஆதீனம் கூடுதலாக மத நல்லிணக்கத்திற்காகவும் உழைத்தவர்.
அரசியல் மற்றும் நித்யானந்தா விவகாரங்கள் அவரது வரலாற்றில் கரும்புள்ளியாக பதிந்திருந்தாலும்கூட, மத நல்லிணக்கத்துக்காக உழைத்ததில் அவருக்கு இணையான ஒருவர் தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்பு குறைவு என்று அடித்துச் சொல்லலாம்.
இஸ்லாம் மார்க்க மேடைகளிலும், கிறிஸ்தவ மேடைகளிலும் ஏறி சைவ சித்தாந்தமும், திருக்குரானும், திருஞான சம்பந்தரும் நபிகள் நாயகமும், ஞான சம்பந்தரும் ஏசுநாதரும் என்ற ஒப்புவமைகளுடன் அருளுரை நிகழ்த்தியவர் மதுரை ஆதீனம்.
இதுகுறித்து ஒரு செய்தியாளனாக அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "உலகில் உள்ள எல்லா மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இறைவன் ஒருவனே. எனவே, எல்லோரும் சகோதர சகோதரிகள் என்றே யாம் பார்க்கிறோம்" என்று பதிலளித்தார் மதுரை ஆதீனம்.
இது ஏதோ ஒரு கால கட்டத்தோடு நின்றுவிட்ட செயல்பாடல்ல. இந்த கரோனா காலத்தில்கூட, அமெரிக்க பக்தர் ஒருவரது ஏற்பாட்டில் இணைய வழியில் மும்மத பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசினார் மதுரை ஆதீனம். அந்தச் செய்தியை இந்து இணையதளம் பதிவு செய்திருந்தது.
மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கியும் மத நல்லிணக்கத்துக்காப் பணியாற்றியவர் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள். 1981, 82ம் ஆண்டுகளில் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் நடந்த மதக்கலவரம் மூண்டபோது, செய்தி கிடைத்த அடுத்த நிமிடமே அந்த மாவட்டத்துக்குப் புறப்பட்டுப் போனவர் ஆதீனம். தொடர்ந்து அங்கே நான்கு மாத காலம் தங்கியிருந்து கூட்டங்கள் வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் மக்களைச் சந்தித்து அமைதியை ஏற்படுத்தும் வேலையைச் செய்தார் ஆதீனம்.
அந்த நேரத்தில் சிலர் தங்கள் மதத்தினரை கொம்பு சீவிவிட்டதைக் கண்டித்ததுடன், அவர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட இருமத மக்களையும் கோட்டாறு மருத்துவமனையிலும், அந்தந்த ஊர்களிலும் சந்தித்து உடையும், உணவும் வழங்கி ஆசீர்வதித்தார்.
1981ம் ஆண்டு தென்காசி மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவம், மதக்கலவரமாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டபோது உடனடியாக அந்தப் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றார் ஆதீனம். மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, சைவ சமய பேருண்மைகளையும், இஸ்லாம் மார்க்கத் தத்துவத்தையும் எடுத்துக்கூறி அவரவர் மதங்கள் அவரவருக்குப் பெரியது என்றும், லகும்தீனுக்கும் வலியதீன் என்ற வரிகளைச் சுட்டிக்காட்டியும் அமைதியை ஏற்படுத்தினார்.
மீனாட்சிபுரத்தில் பட்டியலின மக்களுடன் சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டு உணவருந்திய ஆதீனத்தின் அருகில் அமர்ந்து உணவு உண்டவர், பிற்காலத்தில் பிரதமரானா வாஜ்பாய் அவர்கள்.
இசையில் ஆர்வம் கொண்ட மதுரை ஆதீனம் நாகூர் ஹனிபாவின் முன்வரிசை ரசிகர். அவரது பாடல்கள் பலவற்றை தன்னுடைய குரலில் பக்தர்கள் முன்னிலையில் பாடிக்காட்டியவர்.
அதில் அல்லாவைப் பற்றிய பாடல்களும் உண்டு. உடல் நலம் குன்றியிருந்த ஹனிபாவை வீட்டிற்கே சென்று பார்த்தவர். அதேபோல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையில் ஒரு மத நல்லிணக்கப் பாடலையும் ஆதீனம் பாடியிருக்கிறார்.
மதுரை ஆதீனத்தில் உள்ள செப்பேடு, ஓலைச்சுவடிகள் மற்றும் ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களை எல்லாம் தொகுத்து மதுரை ஆதீன வரலாற்றை 2007ம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டார் அருணகிரிநாதர். அந்த நூலில் கூட, "திப்பு சுல்தான் மதுரை ஆதீன மடத்துக்கு நேரில் வந்து அன்றைய ஆதீனம் (282) பாம்பணிநாத ஞானசம்பந்த தேசிகரிடம் உரையாடி, பூஜைக்குரிய வெள்ளித் தாம்பாளங்கள், தோல் முரசு, வெள்ளித் திருச்சின்னம், புனுகு, ஜவ்வாது, உயர்ந்த வகை அரபு நாட்டு அக்தர் வகைகள், வெள்ளி வாள் ஆகியவற்றுடன், ஆண் யானை ஒன்றையும் பரிசளித்தார்" என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
அதேபோல, "ஔரங்கசீப்பின் படைத்தளபதியும், மதுரை மீது படையெடுத்து வந்தவருமான மாலிக்காபூர் கூட அன்றைய ஆதீனம் (237) வேலாயுத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இரண்டு குதிரைகளைப் அன்புப் பரிசாக வழங்கிய" செய்தியையும் பதிவு செய்துள்ளார். இதேபோல ராபர்ட் டி நோபிலி, சீகன் பால்கு அய்யர், வீரமாமுனிவர், டாக்டர் ஜி.யு.போப் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் மதுரை ஆதீனத்துக்கு வந்த செய்தியையும், அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியையும் விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்துள்ளார் அருணகிரிநாதர்.
மதுரை ஆதீனம் என்ற அவரது ஆசனத்தை இன்னொருவர் நிரப்பலாம். ஆனால், மதநல்லிணக்கத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை தனியொருவரால் செய்துவிட முடியுமா என்பது சந்தேகமே.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த தனியார் டிவி செய்தியாளரும், இஸ்லாமிய இளைஞருமான சல்மான் தன்னுடைய திருமணத்துக்கு ஆதீனத்துக்கு அழைப்பிதழ் கொடுத்தார். அந்த நிகழ்வுக்குச் சென்று மணமக்களை வாழ்த்திப் பேசியதுடன், ஆசியும் வழங்கினார் அருணகிரிநாதர்.
திருச்சிற்றம்பலம்!