திருச்சி மாவட்டம் தொரக்குடியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ.65.69 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மூலம் திருச்சி மாவட்டம் தொரக்குடி என்ற கிராமத்தில் 2013-ம் ஆண்டு முதல் அரசு தோட்டக்கலை பண்ணை செயல்பட்டு வருகிறது.
ஏற்கெனவே 10 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த இந்த பண்ணையின் குறுக்கே காவிரி – குண்டாறு இணைப்புக் கால்வாய் வெட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக பண்ணையின் அளவு 5 ஏக்கராக குறைந்தது. இதையறிந்த ஆட்சியர் சு.சிவராசு பண்ணைக்கு அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான ஏறத்தாழ 25 ஏக்கர் நிலத்தை பண்ணைக்கு வழங்க கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது பண்ணை 30 ஏக்கர் பரப்பளவில் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, மாதுளை, எலுமிச்சை, பேரீச்சை, நெல்லி போன்ற பழ மரக்கன்றுகளும், வேம்பு, செம்மரம், புளி, தேக்கு, சந்தனம், சவுக்கு, தென்னை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளும், கீரை, முருங்கை, மிளகாய், கத்தரி, தக்காளி நாற்றுகள், மல்லிகை, செம்பருத்தி உள்ளிட்ட பூச்செடிகள் தயார் செய்யப்பட்டு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த பண்ணை 2016-17-ம் ஆண்டில் ரூ.50 ஆயிரம், 2017-18-ம் ஆண்டில் ரூ.16 லட்சம், 2018-19-ம் ஆண்டில் ரூ.18 லட்சம், 2019-20-ம் ஆண்டில் ரூ.55 லட்சம் நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் (2020-21) ரூ.65.69 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து பண்ணையின் மேலாளர் என்.நடராஜன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
கடந்த ஆண்டில் 93 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை 100 சதவீதம் எட்டியுள்ளோம். இங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வந்து மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது அரசு வழங்கியுள்ள கூடுதல் இடம் முழுவதும் வேலி அமைக்கப்பட்டு, பம்புசெட் போட்டுள்ளோம். 500 சதுர மீட்டர் பரப்பளவில் இரு இடங்களில் நிழல்வலைக் கூடம், 3,750 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 தரைமட்ட நீர் தொட்டிகள், 500 சதுர அடி பரப்பளவில் மண்புழு உரம் தயாரிப்பதற்கான சிமென்ட் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு தென்னை மற்றும் பழமரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆண்டுதோறும் லாபம் ஈட்டி வரும் இந்த பண்ணைக்கு கூடுதல் இடம் கிடைத்ததை மிகுந்த பயனுள்ள வகையில் பயன்படுத்தி விவசாயிகள், பொதுமக்களுக்கு தரமான மரக்கன்றுகள் வழங்குவதுடன், பண்ணையும் கூடுதல் லாபம் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா கூறும்போது, ‘‘தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மர மற்றும் காய்கறி கன்றுகளை விற்பனை செய்ய திருவானைக்காவல் அருகே விற்பனை மையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.