தஞ்சாவூரில் வாங்கிய கடனுக்கு உரிய தவணை கட்டவில்லை எனக் கூறி, நிதி நிறுவனத்தினர், டிராக்டரை பறிமுதல் செய்து, எடுத்துச் சென்றபோது, விவசாயி தரையில் படுத்து போராட்டம் நடத்தி, டிராக்டரை மீட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(37). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.4.75 லட்சம் கடனாக பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.52 ஆயிரம் தவணை தொகை செலுத்த வேண்டும். இதில், கடன் செலுத்த மொத்தமுள்ள 12 தவணைகளில் இதுவரை 8 தவணைகளை சுரேஷ்குமார் கட்டியுள்ளார். கரோனா உள்ளிட்ட காரணங்களால், கடந்த 2 தவணைகளை சுரேஷ்குமாரால் கட்ட முடியவில்லை, இதனால், அவர் நிதி நிறுவனத்துக்குச் சென்று தவணை கட்ட காலஅவகாசம் கேட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் சுரேஷ்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்த நிதி நிறுவன ஊழியர்கள் சிலர், டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுரேஷ்குமார் டிராக்டரை துரத்திச் சென்று ஒரு கிலோ மீட்டர் தொலைவில் டிராக்டரை மறித்து அதன் முன்பு படுத்துக்கொண்டு, டிராக்டரை எடுத்துச் செல்லாதவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, கடன் தவணையை செலுத்த மேலும் 2 மாதம் அவகாசம் கேட்டுள்ளார். இதனால் நிதி நிறுவனத்தினருக்கும், சுரேஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஊர் மக்கள் திரண்டதால், டிராக்டரை விட்டு விட்டு நிதி நிறுவனத்தினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்து சுரேஷ்குமார் நேற்று நிதி நிறுவனத்தில் சென்று கேட்டபோது, கடன் வழங்குவது மட்டும் தான் எங்கள் வேலை, கடனை திருப்பி வசூல் செய்வது திருச்சியைச் சேர்ந்த அதிகாரிகள் தான். எனவே, இந்த பறிமுதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக சுரேஷ்குமார் ஆன்லைனில் ஒரத்தநாடு போலீஸில் புகார் அளித் துள்ளார்.