திருச்சி வழக்கறிஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி பாலக்கரை கீழப்புதூரைச் சேர்ந்தவர் கோபிக்கண்ணன்(32). வழக்கறிஞரான இவர், கடந்த மே 9-ம் தேதி இரவு திருச்சி நீதிமன்ற காவல்நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் 7 பேர் மட்டும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மாநகர போலீஸார் இவ்வழக்கை முழுமையாக விசாரிக்கவில்லை என்பதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கோபிக்கண்ணன் குடும்பத்தினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த சூழலில் கோபிக்கண்ணனை கொலை செய்ய கூட்டு சதியில் ஈடுபட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாக கோவை பெரியார் நகரைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் (21), திருவானைக்காவல் நான்காம் பிரகாரம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி (24) ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.