பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு, தாய்ப்பால் சேகரிக்கும் இடம், அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவற்றை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் அவசர விபத்து சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என்றார்.
அப்போது, தேசிய சுகாதார திட்ட இயக்குநர் தரேஷ்அகமது, மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா, எம்எல்ஏ எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சி.ராஜேந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் திருமால், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, மேலமாத்தூர், பேரளி கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்த அமைச்சர்கள், மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின் கீழ் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக, அரியலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் கட்டப்படும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிட கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தனர். அதன்பின், அரியலூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம், ரூ.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை திறந்து வைத்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், எஸ்.பி கே.பெரோஸ்கான் அப்துல்லா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் எஸ்.குருநாதன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எச்.முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.