தடையை அறியாமல் ஏற்காடு செல்ல வாகனங்களில் வந்த பயணிகளை மலை அடிவாரத்தில் போலீஸார் நிறுத்தி திருப்பி அனுப்பினர். படம்:எஸ்.குரு பிரசாத் 
Regional01

வாகனங்களில் ஏற்காடு வரும் பயணிகளிடம் - ரசீது வழங்காமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு :

செய்திப்பிரிவு

ஏற்காட்டுக்கு வாகனங்களில் வரும் பயணிகளிடம் ரசீது கொடுக்காமல்சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இருசக்கர வாகனம், கார் மற்றும் வேன்களில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகளிடம் மலை அடிவாரத்தில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிகள் ஏற்காடு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் ஏற்காடு வருவோர் தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

இந்நிலையில், மலை அடிவாரத்தில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும்போது, அவ்வப்போது ரசீது கொடுக்காமல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரசீது மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரசீது கொடுக்காமல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வரவில்லை. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இதனிடையே, நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளதை அறியாமல், பயணிகள் பலர் ஏற்காடு வந்தனர். அவர்களை மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

SCROLL FOR NEXT