இரும்புலியூர் ஏரியில் தாம்பரம்நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடுவதை சட்டப்படி அனுமதிக்க முடியாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட இரும்புலியூர் ஏரியில், தாம்பரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விடுவதாகவும், குப்பைகளை ஏரியில் கொட்டுவதாகவும் நாளிதழ் ஒன்றில் கடந்த ஆண்டு செய்திவெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. செய்தித்தாளில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை அறிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. ஒவ்வொரு துறையும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் செய்யஅவகாசம் கோரினார். பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் கூட்டுக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மாவட்ட ஆட்சியர், தாம்பரம் நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளும் தனிஅறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அமர்வின் அறிவுறுத்தல் அடிப்படையில், விதிமீறல்களைத் தடுக்க தொடர்புடைய துறைகள்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் தாம்பரம்நகராட்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தாம்பரம் நகராட்சி இரும்புலியூர் ஏரியில் தொடர்ந்து கழிவுநீர் விட்டு வருவதை சட்டப்படி அனுமதிக்க முடியாது. தாம்பரம் நகராட்சி சில திட்டங்களை முன்னெடுத்தாலும், அவை நீண்டகால திட்டமாக உள்ளன. அமர்வின் உத்தரவுபடி, குறுகியகால திட்டத்தை செயல்படுத்தாதலால், இப்போதும் ஏரியில்கழிவுநீர் கலந்து வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
உரிய உதவிகளை வழங்கி, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஆகஸ்ட்27-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.