செங்கல்பட்டில் வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ஆண்டுக் கடன் திட்ட அறிக்கையை, மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் வெளியிட்டார். மாவட்டத்தில் ரூ.4,150 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயக் கடனாக ரூ.2 ஆயிரம்கோடி, சிறு, குறுந் தொழில் கடனாக ரூ.929 கோடி, கல்வி, வீடு, மரபுசாரா எரிசக்தி கட்டமைப்புகள் போன்ற இதர முன்னுரிமைக் கடனாக ரூ.1,221 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கடன் தொகையை குறித்த காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், மகளிர் திட்டஇயக்குநர் ஸ்ரீதர், நபார்டு வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார் கூறும்போது, "செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடப்பாண்டில் ரூ.4,150 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் கூடுதலாகும்" என்றார்.