‘‘பெண்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினால் பயப்பட வேண்டாம்,’’ என சிவகங்கை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கந்துவட்டி புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று யாரேனும் மிரட்டினால் பயப்பட வேண்டாம். இதற்காக மனமுடைந்து வேறு முடிவுக்கு போக வேண்டாம்.
சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர்கிரைம் பிரிவில் புகார் கொடுத்தால் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து கடும் நடவடிக்கை எடுப்போம். ஆன்லைனில் புகார் கொடுத்தாலே போதும்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிவகங்கையில் சிறப்பு மேளா நடந்தது. இதில் 109 புகார்கள் வந்தன. தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் இல்லங்களை காவல்துறை சர்வர் மூலம் இணைத்துள்ளோம். இதன்மூலம் காணாமல்போன 11 பேரை கண்டுபிடித்துவிட்டோம். மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மொபைல்களை கூட கண்டுபிடித்து வருகிறோம். இதுவரை 35 மொபைல்களை மீட்டுள்ளோம். இதனால் மொபைல்கள் காணாமல்போன கூட தயக்கமின்றி புகார் கொடுக்கலாம் என்றார்.