Regional02

மணப்பாடு கடற்கரையில் - முகத்துவாரம் அமைக்கும் பணி தொடக்கம் :

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.4.72 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 18 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை உத்தரவு, 43 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் ரூ.15.50 லட்சத்தில் மணல் திட்டுகளை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். 5 நாட்டுப் படகு மீனவர்களுக்கு அரசு மானியத்தில் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வெளி பொருத்தும் இயந்திரம் வழங்கப்பட்டது.

மங்களூர் கடல் பகுதியில் காணாமல் போன இ.டென்சன் என்ற மீனவரின் குடும்பத்துக்கு தினப்படி ரூ..250 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.27 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, “மணப்பாடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்து தரப்படும்” என்றார். திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், உடன்குடி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT