ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) மணிவண்ணன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 1327 பள்ளிகளில் சத்துணவுக் கூடங்கள்செயல்படுகின்றன. இவற்றில் சிறப்பாக செயல்படும் சத்துணவுக் கூடங்களைத் தேர்வு செய்து, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற விண்ணப்பித்தோம்.
நாங்கள் பரிந்துரைத்த பள்ளிகளில், ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கும் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
வளாகத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருத்தல், தூய்மையாக சமைத்தல், பயன்படுத்தும் உணவு பொருள், உணவு பொருட்களை பாதுகாப்பாக வைத்திருத்தல், இவ்வளாகத்தில் இயற்கையாக காய்கறித் தோட்டம் அமைத்து கூடுதல் காய்கறி பயன்படுத்துதல், குழந்தைகள் உண்ணும் விதம், குழந்தைகள் சுத்தம், சுவை, பிற தனிச்சிறப்பு என பல்வேறு வகைகளில் தரத்தை சேகரித்தனர்.
இதன் அடிப்படையில் 3 பள்ளிகளுக்கு தரச்சான்று வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை ஏற்று, ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபி கலிங்கியம் அரசு உயர்நிலைப்பள்ளி, பவானிசாகர் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. இங்கு கடைபிடிக்கப்படும் சுகாதார முறையை, பிற சத்துணவு மையங்களிலும் கடைபிடிக்க வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.