திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். படம். ந.சரவணன். 
Regional02

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 15-ம் தேதிக்கு பிறகு - இரு சக்கர வாகனத்தில் காவலர்கள் ரோந்துப்பணி : வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தகவல்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 15-ம் தேதிக்கு பிறகு இரு சக்கர வாகனங்கள் மூலம் காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடவுள்ளனர் என வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

நக்சலைட் தாக்குதலில் உயிர் நீத்த காவலர்களுக்கு ‘வீர வணக்கம்’ அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐஜி சந்தோஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

அந்த வழக்கில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், விரைவில் கைது செய்யப் படுவார்கள். மாவட்டம் முழுவதும் இரவு ரோந்துப்பணி தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 15-ம் தேதிக்கு பிறகு இரு சக்கர வாகனம் மூலம் காவலர்கள் ரோந்துப்பணியை தொடங்கவுள் ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை வடக்கு மண்டலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 432 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 27 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 53 பேர், வேலூர் மாவட்டத்தில் 47 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில், அங்கு உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். கரோனா 3-வது அலை தடுப்புப்பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

எனவே, பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தகுதியுள்ளவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 98 சதவீதம் காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது, வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, எஸ்பி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT