Regional01

பண்ணாரி, பெரியமாரியம்மன் கோயில்களில்ஆடி அமாவாசையன்று பக்தர்களுக்குத் தடை : கூடுதுறை, கொடுமுடியில் நீராட அனுமதியில்லை

செய்திப்பிரிவு

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசையன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரிக்கரை உள்ளிட்ட இடங்களில் ஆடி அமாவாசையின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், படையலிட்டு வழிபடவும், ஆறுகளில் நீராடி இறைவனை வழிபடவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடுவது வழக்கம். அதே போல், ஆடி அமாவாசையின் போது பண்ணாரி மாரியம்மன் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வரும் 8-ம் தேதி வரவுள்ள ஆடி அமாவாசையன்று கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஆடி அமாவாசை (8-ம் தேதி) நாளில், பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரர், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி, பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன், தலையநல்லூர் பொன்காளியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோயில், நஞ்சை காளமங்கலம் கல்யாண வரதராஜப் பெருமாள், குலவிளக்கம்மன், வைராபாளையம் சோழீஸ்வரர், காஞ்சிகோயில் சீதேவியம்மன், நசியனூர் மதுரகாளியம்மன், திருவாச்சி கரியபெருமாள், திண்டல் வேலாயுதசுவாமி, பெருந்துறை செல்லாண்டியம்மன், அம்மாபேட்டை சொக்கநாதசுவாமி, காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர், ஈரோடு பெரியமாரியம்மன் கோயில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.

மேலும், பவானி கூடுதுறை, கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் படித்துறை, சித்தோடு காலிங்கராயன் அணைக்கட்டு, மலையம்பாளையம் காரணம்பாளையம் அணைக்கட்டு, கொடிவேரி மற்றும் பவானி சாகர் அணைப்பகுதியில் ஒன்று கூடவும், நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசையன்று வைதீக காரியங்களை செய்யக் கூடாது என புரோகிதர்களை அழைத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT