ரயில்வே நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோருக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு துணைத்தலைவர் கே.என்.பாஷா, மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையம் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படவுள்ளது. மேலும், புறநகர் பேருந்துகளை நிறுத்தும் வகையில் ஈரோடு சோலார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக இந்த இரு பேருந்து நிலையங்களிலும் ரயில்வே முன்பதிவு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயிலில் பயணிக்கும் 60 வயது ஆண் பயணிக்கு 40 சதவீதம் கட்டணச் சலுகையும், 58 வயது நிறைவடைந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகை கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த சலுகை ரத்து செய்யப்பட்டதால், ரயில் பயணம் மேற்கொள்ளும் முதியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதியோருக்கான கட்டணச் சலுகையை மீண்டும் அமல் படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.