சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பில் நிமிடத்துக்கு தலா 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இரு அலகுகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தபோது, நோயாளிகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை இணைந்து, ரூ.1.20 கோடி நிதியில் நிமிடத்துக்கு தலா 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இரு அலகுகளுக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த அலகுக்கான சிலிண்டர்கள் நிறுவும் பணி நேற்று தொடங்கியது. ஆக்சிஜன் உற்பத்தி அலகில் இருந்து பெறப்படும் ஆக்சிஜனை குழாய் மூலமாக நேரடியாக, சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லவும், சிலிண்டர்களில் ஆக்சி ஜனை சேமிக்கவும் வசதி உள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே, 48 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இதன் மூலம் 1,400 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருகிறது.