‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக விரிவுப்படுத்தப்படும் என சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை சார்பில் சேலம் மாவட்டத்துக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி சத்யா நகரில் உள்ள வீடுகளுக்கு சென்ற சேலம் ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவச் சேவை வழங்கப்படுவதைப் பார்வையிட்டு, சிகிச்சைக்கான மருந்துகளை வழங்கினர். மேலும், இத்திட்டத்துக்கான பிரத்யேக வாகனச் சேவையை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் கன்னங்குறிச்சி அடுத்த மோட்டாங்குறிச்சி துணை சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 452 பேர் பயனடைவர்.
இதுதொடர்பாக ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பல்வேறு கட்டங்களாக சேலம் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் சமுதாய நலப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.
பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி தொற்றா நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தேசிய சுகாதார குழுமம் இணை இயக்குநர் விஜயலட்சுமி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.