திருநெல்வேலி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணி யாளர்களின் வருங்கால வைப்புநிதி பணம் ரூ. 3 கோடி கையாடல் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி, 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகரத்தில் தூய்மைப் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள் உள்ளிட்ட 1,500 தினக்கூலி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில், கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து மொத்தமாக ரூ.3 கோடி பணம் செலுத்தப்படாமல் இருக்கிறது. இது தொடர்பான கணக்கு விவரங்களும் மாநகராட்சியில் இல்லை என்று தெரியவந்ததை அடுத்து, 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2019 – 2020-ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி, பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும், படிப்படியாக சில தினங்களிலேயே மீதமுள்ள தொகையையும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் ஆணையர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.