மதுரை-போடி இடையே உள்ள மீட்டர்கேஜ் வழித்தடம் அகலப்படுத்தும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஏற்கெனவே மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை சோதனை ஓட்டம் முடிந்திருந்த நிலையில் நேற்று ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
துணை தலைமைப் பொறியாளர் வி.சூரியமூர்த்தி தலைமையில் உதவி நிர்வாகப் பொறியாளர் சரவணன், முதுநிலை பிரிவு பொறியாளர் ஜான்பிளமண்ட் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். காலை 11.20-க்கு ஆண்டிபட்டியில் புறப்பட்ட இன்ஜின் 80 முதல் 100 கி.மீ.வேகத்தில் இயக்கப்பட்டு 17 கி.மீ. தூரத்தை 15 நிமிடங்களில் கடந்து தேனி ரயில் நிலையத்துக்கு 11.35-க்கு வந்தடைந்தது.
அதிகாரிகள் கூறுகையில், ரயிலை இயக்கும் அளவுக்கு தண்டவாளங்களின் தன்மை அமைந்துள்ளது. 2 வாரங்களில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் அபய்குமார் தலைமையில் பெட்டிகளுடன் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்பு சரக்கு மற்றும் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்தில் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயங்க வாய்ப்புள்ளது என்றனர்.
ஆனால் தேனி-போடி வழித் தடத்தில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடப்பதால் அப்பகுதியில் ரயில்களை இயக்க தாமதமாகும். தேனி மாவட்ட மக்கள் ரயிலைப் பார்த்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று வந்த சோதனை இன்ஜினை ஆர்வமுடன் வரவேற்றனர். தேனியில் 3 முக்கிய இடங்களில் ரயில்வே கேட்டுகள் அமைந்துள்ளதால் நெரிசல் ஏற்படும். எனவே இப்பகுதியில் மேம்பாலப் பணிகளை விரைவு படுத்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.