சேலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசியதில் பூசாரி காயம் அடைந்தார். வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் அடுத்த மல்லுார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32) பெட்ரோல் பங்க் ஊழியரான இவர் அப்பகுதியில் உள்ள கோயில் பூசாரியாகவும் இருந்து வருகிறார். .
இவர் நேற்று முன்தினம் அம்பேத்கர் நகரில் உள்ள தனது நண்பர் பூபாலனின் வீட்டில் அருகில் நின்று பூபாலனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வினோத்குமாரின் பைக் மற்றும் பூபாலனின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பினர். இதில், வினோத்குமாரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்பி அபிநவ் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பூபாலன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கு உள்ளதாலும், அவர் ரவுடி பட்டியல் இருப்பதால், முன் விரோதம் காரணமாக அவர் மீது தாக்குதல் நடத்த நாட்டு வெடிகுண்டை வீசியிருக்கலாம் என தெரியவந்தது.
இதனிடையே, வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்யக்கோரி மல்லுார்–வீரபாண்டி சாலையில் நேற்று பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற டிஎஸ்பி பாஸ்கரன் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். மேலும், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.