தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.
அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலின் மகத்துவங்களை எடுத்துக்கூறி அவர்களை குழந்தை பிறந்த நிமிடம் முதல் இரண்டு வருட காலங்களுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டிய அவசியத்தை மருத்துவக் குழுவினர் எடுத்துரைக்கின்றனர்.
குழந்தைக்கு முதல் 6 மாதத்துக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது. தாய்ப்பால் கொடுப்பது நாம் குழந்தைக்கு கொடுக்கும் முதல் தடுப்பூசி. வயிற்றுப்போக்கு உண்டாகாமல் தடுக்கிறது. தாய்ப்பால் குடித்து வரும் குழந்தை, புட்டி பால் குடித்து வரும் குழந்தையை விட பலமடங்கு புத்திக் கூர்மை உடையதாக விளங்குகிறது. குழந்தை வளரும்போது உடல் பருமன் நோய், சர்க்கரை நோய், ஒவ்வாமை நோய் போன்றவை ஏற்படுவது மிகக் குறைவு. குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தேவையான கூடுதல் புரதம், அடிப்படை ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே தாய்பாலில் கிடைக்கிறது.
குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை, தேன், கழுதைப்பால், புட்டிப்பால் கொடுக்கக் கூடாது. குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து சுரக்கும் மஞ்சள் நிறம் கொண்ட கெட்டியான பால் சீம்பால் எனப்படும். இதில் உள்ள வைட்டமின் சத்து குழந்தைக்கு வேண்டிய மூளை வளர்ச்சி மற்றும் அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குழந்தையை பல வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. அதனால் குழந்தைக்கு கட்டாயம் சீம்பால் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு பிரசவத்துக்கு பின் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தடுக்கும். தாய்க்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது. தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது. தாய்க்கு கருவணுக்கள் உற்பத்தியாவது, மாதவிடாய் ஏற்படுவதும் தாமதமாகிறது. இது ஒரு இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு முறையாகும்.
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் வெளிக்கொணர்ந்த தாய்ப்பாலை வெளியில் வைத்தபடியே குழந்தைக்கு நான்கு மணி நேரம் வரை ஊட்டலாம். கரோனா காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிக இன்றியமையாததாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் கீரை, பருப்பு, பால், காய்கறி வகைகளை சாப்பிடுதல் அவசியமாகும். தாய்ப்பால் கொடுக்கும் முன்பு பால், பழச்சாறு அல்லது நீர் ஆகாரமும் அருந்திவிட்டு தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடலுக்கு நல்லது.
தாய்க்கு மனக்கவலை அல்லது அதிர்ச்சி ஏற்பட்டால் பால் சுரப்பது குறையும். அதனால் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு தாய்ப்பால் கொடுப்பதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதனால் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க முடியும்.
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.