கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 87 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தொடர்ந்து 3-வது அலை பரவுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 3-ம் அலை பரவலைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முகக் கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை சுத்தம் செய்தல் குறித்து விளக்குதல், விழிப்புணர்வுப் பேரணி நடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின்பேரில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு காவலருக்கு தலா 25 முகக் கவசங்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் நேற்று வழங்கப்பட்டன.
ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும், காவல்துறையில் உள்ள சிறப்புப் பிரிவுகளுக்கும் இவை தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டன. அதோடு, எஸ்.ஐ. மற்றும் காவல் உயர் அதிகாரிகளுக்கு கூடுதல் முகக் கவசங்கள் என சுமார் 87 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.