சிவகங்கை மாவட்டத்தில் விரல் ரேகை பதியாமல் ரேஷன் பொருட் களை வழங்கியவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப் படுகிறது.
ஒரே இந்தியா ஒரு ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி விரல் ரேகை பதிவுக்கு பிறகே ரேஷன் பொருட்கள் விநியோகிக்க வேண்டும். முதியோர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியர்கள் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்கள் அனுமதி பெற்று விரல் ரேகை பதிவின்றி பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கலாம்.
இந்நிலையில் கரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகைத் தொகுப்பு வழங்கியதால் ஜூன் மாதம் விரல் ரேகை பதிவு இல்லாமல் பொருட்களை வழங்க அரசு அனுமதித்தது. மீண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் விரல் ரேகை பதிவை அரசு கொண்டு வந்தது. இருந்தபோதிலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 30 சதவீதத்துக்கு மேல் பிராக்ஸி முறையிலேயே பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதையடுத்து பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கிய விற்பனையாளர்களுக்கு வழங்கல் பிரிவு அதிகாரிகள் ரூ.1,000 அபராதம் விதித்து வருகின்றனர்.
இது குறித்து ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
பலருக்கு விரல் ரேகை பதிவாவதில்லை. இதனால் பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கினால் அபராதம் விதிக்கின்றனர். இப்பிரச்சினையைத் தீர்க்க விரல் ரேகைக்கு பதிலாக கண் விழியை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கினால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. அதனால் அபராதம் விதிக்கப்படுகிறது,’ என்றார்.