ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வார்டுகளை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராதாபுரம் ஒன்றியத்திலுள்ள வார்டு எண் 1 மற்றும் 2-க்கு உட்பட்ட பகுதிகளான காரியா குளம், கணபதிநகர், செம்மண் குளம், சுப்பிரமணிய பேரி, தியாகராஜபுரம் ஆகிய பகுதிகள், 15 கி.மீ.-க்கு அப்பாலுள்ள சவுந்திரபாண்டியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய வார்டு எண் 7-ல் சேர்க்கப்பட்டுள்ளன. இதை நீக்கி மீண்டும் ராதாபுரம் ஒன்றியம் வார்டு எண் 8-ல் சேர்க்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, வார்டு எண் 1 மற்றும் வார்டு எண் 2 உட்பட்ட பகுதிகளில் ராதாபுரம் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ராதாபுரம் அரசு மருத்துவமனை, அரசு கால்நடை மருத்துவமனை போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன. எனவே, அரசு அலுவலகங்களை அணுகுவதற்கு பழைய முறையில் இருந்தால்தான் வசதியாக இருக்கும் என்று தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு மறுசீரமைப்பை வலியுறுத்தி மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கேட்டு, பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.