கரோனா பரவலை தடுக்க அரசு விதிமுறைகளை வியாபாரிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும், இல்லையென்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்தார். பின்னர், கரோனா விதிமுறைகளை பின்பற்றாத பாத்திரக்கடைக்கு நேற்று ‘சீல்' வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 3-வது பரவல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தினசரி பொது மக்களுக்கு கரோனா தடுப்பு நடவ டிக்கை குறித்து விழிப்புணர்வும், கரோனா தொற்றில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் 3-வது நாளான நேற்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, திருப்பத்தூர் நகரில் வியாபாரம் செய்து வரும் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வணிக நிறு வனங்களில் தடுப்பு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கடைக்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கு கிருமி நாசினியை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத் தல், முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கை யாளர்களை உள்ளே அனு மதிக்காமல் இருத்தல் போன்ற முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை வணிகர்கள் மேற்கொள்ள வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்களுடைய கடைகளில் பணி புரியும் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா? என ஆய்வு செய்து, தடுப்பூசி போடாதவர்களை கட்டாயம் தடுப் பூசி போட அறிவுறுத்த வேண்டும்.
வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இம்மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்களில் பிளாஸ் டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல் படி கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவபிரகாசம், நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர் விவேக் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.