சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர்.
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து சென்றனர். இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் முழு எண்ணிக்கையில் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வந்தனர். காலையில் வகுப்புகள் தொடங்கி, மாலையில் வகுப்புகள் முடிவடையும் நேரம் வரை பணியில் ஈடுபட்டனர். ஆசிரியர் வருகை பதிவில் பயோமெட்ரிக் முறை தவிர்க்கப்பட்டு வருகை பதிவேடு நோட்டுகளில் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறும்போது, “மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்கிறது. மாணவர் சேர்க்கை விவரங்களை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்பிக்கப்பட்ட பாடங்களை மாணவர்கள் கவனித்து படிக்கிறார்களா? என ஒவ்வொரு மாணவரிடமும் செல்போன் மூலம் விசாரித்து, அவர்களுக்கு அசைன்மென்ட் கொடுப்பது, செய்முறை பாடங்களுக்கான பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டோம்” என்றனர்.