ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெருமாள் கோயில் புதூரைச் சேர்ந்தவர் மனோகரன் (64). விவசாயி.இவரது மனைவி வசந்தா (61). ஆடு, மாடுகளை வளர்த்து வந்த வசந்தா, அவற்றை தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக கால்நடைகளை ஓட்டிச்சென்ற வசந்தா, இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் தேடிப்பார்த்தபோது, அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து விசாரித்த சிறுவலூர் போலீஸார், கோபியை அடுத்த நாமக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகசுந்தரம் (41) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், தனது தோட்டத்தில் இருந்து வசந்தா கரும்பு தோகைகளைப் பறித்து கால்நடைகளுக்கு கொடுத்ததைக் கண்டித்ததாகவும், அப்போதுஏற்பட்ட தகராறில் அவரைக் கல்லால் தாக்கியதில் காயமடைந்து இறந்ததும் தெரியவந்தது.