தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம்திருச்செங்கோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டணியின் தலைவர் ரா.நடேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.ராஜ்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வே.அண்ணாதுரை தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.
உயர்கல்விக்கு அனுமதி வேண்டி காத்திருப்போருக்கு, மேல் நடவடிக்கை ஏதுமின்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள 17 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை, தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் இணைய வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.தங்கவேல், மாவட்ட பொருளாளர் பெ.சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.