ஆதிச்சநல்லூர் தமிழ்ச்சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 10 நாள் புத்தகத் திருவிழா வைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க விழாவில் ஆதிச்சநல்லூர் தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஹரிஹரன், சீனிபாண்டியன் வரவேற்றனர். அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்ப தேவர் தலைமை வகித்தார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். முதல் விற்பனையை வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். டிஎஸ்பி வெங்கடேஷன் பெற்றுக்கொண்டார்.
காவல்துறை முன்னாள் தலைவர் மாசானமுத்து புதிய புத்தகங்களை வெளியிட, குமரகுருபர சுவாமிகள் கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் ரெங்கசாமி, வைகுண்டம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கந்த சிவசுப்பு, வட்டார மருத்துவர் தினேஷ், திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி பேராசிரியர் இலக்குவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் மேலாளர் மகேந்திரன் நன்றி கூறினார். ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.