Regional03

காவிரி உபரிநீரைக் கொண்டு அந்தியூர், பவானி குளங்களை நிரப்ப வேண்டும் : முதல்வருக்கு திருப்பூர் எம்பி கோரிக்கை

செய்திப்பிரிவு

காவிரி உபரி நீரை மின்மோட்டார்கள் மூலம் எடுத்துச் சென்று அந்தியூர், பவானி பகுதி குளங்களை நிரப்பும் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும், என தமிழக முதல்வருக்கு திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடித விவரம்:

ஈரோடு மாவட்டம் குளத்தூர், அந்தியூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகள், கடந்த 2004-ம் ஆண்டே அபாயகரமான வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் உபரி நீர் வீணாக கடலுக்குச் செல்லும் காலங்களில், காவிரியின் மேற்குக் கரையில், ராட்சத மின் மோட்டார் வைத்து குளத்தூர், அந்தியூர் மற்றும் பவானியின் அனைத்து ஏரி, குளங்களுக்கும் மிக குறைந்த செலவில் நீரினைக் கொண்டு செல்லும் திட்டத்தை வடிவமைக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தால் 1.5 லட்சம் ஏக்கர் மறைமுகமாக பயனடைவதுடன், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும். இதற்கு கால் டிம்சி நீர் மட்டுமே போதுமானதாகும்.

காவிரி ஆற்றின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள எடப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு ரூ.520 கோடி செலவில், சக்திவாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்தி ஏரி, குளங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், காவிரிக்கரையோரம் சுமார் 15 முதல் 20 கிலோ மீட்டரில் அமைந்துள்ள அந்தியூர் மற்றும் குளத்தூர் பகுதி குளம்,குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு, கடலில் வீணாகக் கலக்கும் காலங்களில், அதனைக் கொண்டு இப்பகுதி குளம், குட்டைகளை நிரப்பும் திட்டத்தை உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT