Regional03

102 அடிவரை நீரைத் தேக்கலாம் என்பதால் - பவானிசாகரில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம் :

செய்திப்பிரிவு

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்தில் ஏற்றத்தாழ்வு தொடரும் நிலையில், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பாசன ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். இருப்பினும் அணையின் பாசன நீர் திறப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஜூலை மாதத்தில் 100 அடி வரையிலும், ஆகஸ்ட் மாதத்தில் 102 அடி வரையிலும் நீரினைத் தேக்கி வைக்க முடியும். கடந்த வாரம் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்த கனமழை, பில்லூர் அணை நிரம்பியதால் திறக்கப்பட்ட உபரி நீர் ஆகியவற்றின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கடந்த 25-ம் தேதி 100 அடியை எட்டியது. இதையடுத்து, அணைக்கு வந்தநீர் முழுமையும், கீழ் மதகுகள் வழியாக உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது அணைக்கான நீர் வரத்து அடிக்கடி மாறுபட்டு வருகிறது. நேற்று காலை 8 மணிக்கு அணைக்கு விநாடிக்கு 6417 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், மதியம் 12 மணிக்கு 3322 கனஅடியாகக் குறைந்தது. நேற்று மாலை நீர்வரத்து மேலும் குறைந்து 5 மணிக்கு விநாடிக்கு 567 கனஅடி நீர் வரத்து இருந்தது.

அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி ஆகஸ்ட் மாதத்தில் 102 அடி வரை நீரினைத் தேக்கி வைக்கலாம் என்பதால் உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100.20 ஆக இருந்த நிலையில், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 1000 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT