ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் தாமிரபரணி ஆற்று கரையோர பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகைகளை திறந்து வைத்து அவர் கூறியதாவது:
மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பில் கரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஆடி மாதம் என்பதால் கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகியவை மிகப்பெரிய புண்ணிய ஸ்தலமாக இருப்பதால், மக்கள் அதிகம் வருவர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 1, 2, 3 மற்றும் ஆடி அமாவாசை நாளான ஆகஸ்ட் 8-ம் தேதி ஆகிய 4 நாட்களிலும் இந்த கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி நகரத்தில் பனிமய மாதா கோயிலிலும் பொதுமக்கள் பங்களிப்பின்றி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிப்பதற்கோ, கூடுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார்.
துப்புரவு பணியாளர்களுக்கு அரிசிப்பை மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார். விழிப்புணர்வு ஆட்டோ பேரணியை தொடங்கி வைத்தார். கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தார்.