கோபி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக, கோபி வட்டார ஆசிரியர் கூட்டணி சார்பில் வழங்கப்பட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை, அமைச்சர் சு.முத்துசாமி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அருகில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன். 
Regional01

பவானிசாகர் அணையிலிருந்து - கீழ்பவானி பாசனத்துக்கு ஆக.15-ல் தண்ணீர் திறப்பு : அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

செய்திப்பிரிவு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும், என வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பெரிய திட்டங்களை செயல்படுத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 90 திட்டங்கள் தொடங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி வரும் 3-ம் தேதி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளது.

கரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கட்சியினரும் மரியாதை செலுத்த அரசு வழிமுறை வகுத்துள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையையேற்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT