ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக இருந்தபோது தொற்று பரவல் அதிகமாக இருந்தது. கோவைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தவிர வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனையும் வீடுகளுக்கே வந்து எடுக்கப்பட்டது. இதன்காரணமாக தொற்று குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை, கோவையைத் தொடர்ந்து ஈரோட்டிலும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 27-ம் தேதி தினசரி பாதிப்பு 127 என இருந்தது. 28-ம் தேதி 140 ஆகவும், 29-ம் தேதி 166 ஆகவும், நேற்று முன்தினம் 171 ஆகவும் பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 127 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று 165 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 93 ஆயிரத்து 694 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 633 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1,462 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது, முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
50 பேருக்கு அபராதம்
அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் எச்சரித்தனர்.