கரோனா பரவலைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இனறு தொடங்கி வரும் 7-ம் தேதி வரை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிர மணியன் தெரிவித்ததாவது:
கரோனா விழிப்புணர்வு வாரத் தையொட்டி கடலூர் மாவட்டத்தில் சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கைக்கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். கரோனா பரவல் தொடர்பாக இணைய வழியில் ஓவியப் போட்டிகள் மற்றும் மாணவர்களிடையே வினாடி,வினா நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித் சிங், கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர். இரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர். செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.