தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவா்களுக்கு ரூ. 98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1.20 லட்சமும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 4 சதவீதம், ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டியில் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள். இத்திட்டத்தின் கீழ் கடன் பெறவிரும்புவோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.